சென்னை பல்கலைக்கழகத்தின் 43வது துணைவேந்தரும், உயர்கல்வித் துறையில் தனித்த முத்திரை பதித்த கல்வியாளருமான பேராசிரியர் ஆர். தாண்டவன் அவர்கள் மறைவடைந்த செய்தி, கல்வி உலகிற்கும், அறிவியல்–சிந்தனைச் சமூகத்திற்கும் மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், பனப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, விவசாயக் குடும்பத்தில் பிறந்த பேராசிரியர் தாண்டவன் அவர்கள் (வயது 63), தனது வாழ்நாளை கல்விக்கும் சமூக சிந்தனைக்கும் அர்ப்பணித்தவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.யூ.சி. பயின்ற அவர், அதே கல்லூரியில் வரலாற்றுத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறையில் உதவி பேராசிரியராக 16 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர் தாண்டவன், ஆய்வுக்கும் கற்பித்தலுக்கும் சம முக்கியத்துவம் அளித்த கல்வியாளர். மாணவர்களிடையே சிந்தனை வளர்ச்சிக்கும், சமூக–அரசியல் புரிதலுக்கும் அவர் அளித்த வழிகாட்டல் குறிப்பிடத்தக்கது.
அண்ணா பொது வாழ்வியல் மையம் – முக்கிய பங்கு
திராவிட இயக்கங்களின் அரசியல் கொள்கைகளை ஆய்வு செய்வதற்காக தொடங்கப்பட்ட இம்மையத்தில், 1990ஆம் ஆண்டு முதல் துறைத் தலைவராக பேராசிரியர் தாண்டவன் நியமிக்கப்பட்டார். பதவி ஓய்வு பெறும் வரை அவர் துறைத் தலைவராகச் சிறப்புடன் பணியாற்றினார்.
| அவருடன் என்றும் மறவா நினைவுகள்… |
பல்கலைக்கழக நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகள்
பேராசிரியர் தாண்டவன் அவர்கள்,
- சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்,
- பல்கலைக்கழகத்தின் பல்வேறு குழுக்களில் உறுப்பினராக பணியாற்றியவர்,
- தியாகராஜர் மற்றும் பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பு வகித்தவர்.
துணைவேந்தராகப் பொறுப்பு வகித்த காலகட்டத்தில், கல்வித் தர மேம்பாடு, நிர்வாக ஒழுங்கு, ஆராய்ச்சி ஊக்கம், பாடத்திட்ட சீரமைப்பு ஆகியவற்றில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் கல்வி உலகில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஈடு செய்ய முடியாத இழப்பு
பேராசிரியர் ஆர். தாண்டவன் அவர்களின் மறைவு, தமிழக உயர்கல்வித் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் உருவாக்கிய கல்விச் சிந்தனைகள், ஆய்வுப் பார்வைகள், நிர்வாகக் கொள்கைகள் ஆகியவை வருங்கால தலைமுறைகளுக்கும் வழிகாட்டியாக விளங்கும்.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக, மறைந்த பேராசிரியர் ஆர். தாண்டவன் அவர்களின் மறைவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் எங்களது ஆறுதலும் அனுதாபமும் உரித்தாகும்.
இவ்வேளையில், மறைந்த பேராசிரியர் ஆர். தாண்டவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
.png)
