சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
"தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன், மிகுந்த மனவேதனையும் மீளா துயரத்தை அளிக்கிறது.
சாதாரண குடும்ப பின்னணியில் பிறந்த நடிகர் விஜயகாந்த் தனது கடினமான உழைப்பால் திரைப்படத்துறையில் காலடி வைத்து படிப்படியாக உச்சத்தை எட்டியவர்.
பல திரைப்படங்களில் அற்புதமான நடிப்பாலும், மக்கள் வாழ்நிலை முன்னேற்றத்திற்காக சமூக முற்போக்கு கருத்துக்களை பேசியும், தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற புரட்சி கலைஞர்.
தனது உழைப்பால் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை, எளிய மக்களுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்தவர். ஏழை, எளிய மக்களின் பசியை போக்கிய மாபெரும் வள்ளல். இளையதலைமுறையினருக்கு வழிகாட்டி, முன்னோடி.
நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர். தென்னிந்தியத் திரையுலகையே தலைநிமிர செய்த பெருமைக்குரியவர்.
திரைதுறை, அரசியல், சமூக சேவை என அனைத்திலும் வெற்றிகண்டு வரலாறு படைத்த மாமனிதர்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.