சந்திரயான்-3 நிலவில் தரை இறங்கும் செய்தியை சேகரிப்பதற்காக திருவனந்தபுரம் சென்ற புதிய தலைமுறை திருநெல்வேலி ஒளிப்பதிவாளர் சங்கர், சாலை விபத்தில் உயிரிழந்தார். இச்செய்தி அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டதின் கீழ் ரூ.5 லட்சமும் சேர்த்து உயிரிழந்த ஒளிப்பதிவாளர் சங்கர் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும், காயம் அடைந்த 3 ஊடகவியலாளர்களுக்கு உயர்தர சிகிச்சையும், நிதி உதவி வழங்கவும் முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சந்திரயான்-3 தொடர்பான செய்தி சேகரிப்பு பணிக்காக நேற்று (23.08.2023) காலை நெல்லையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு காரில் சென்றுள்ளனர் புதிய தலைமுறை செய்தி குழுவினர். பணியை முடித்துக் கொண்டு இரவு நெல்லை திரும்பும் போது நாங்குநேரி டோல்கேட் அருகில் அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் செய்தி ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்தார்.
அவருடன் காரில் பயணித்த செய்தியாளர் நாகராஜன் உட்பட மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த சங்கருக்கு மனைவியும், ஏழு வயதில் மகனும் உள்ளனர்.
இத்தகவலை அறிந்த நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கா.குமார் மற்றும் நேஜயூ குழுவினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
துடிப்பான திறமையான இளம் ஒளிப்பதிவாளர் சங்கர், இன்று அதிகாலை நான்குநேரி அருகே நடந்த வாகன விபத்தில் சிக்கி எதிர்பாராதவிதமாக தன்னுயிர் நீத்தார்.. என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சக செய்தியாளர்கள் அனைவருக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்திற்கு என்றும் உறுதுணையாக நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் இருக்கும்.
உடன் பயணித்து காயம் அடைந்த மூன்று ஊடகவியலாளர்களும் விரைவில் குணம் அடைந்து, உத்வேகத்துடன் செய்தி துறைக்கு சமூக பணியாற்ற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
பத்திரிகையாளர்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டதின் கீழ் ரூ.5 லட்சமும் சேர்த்து உயிரிழந்த இளம் ஒளிப்பதிவாளர் சங்கர் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
மேலும், காயம் அடைந்த மூன்று ஊடகவியலாளர்களுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் நிதி உதவி வழங்கவும் முதலமைச்சர் அவர்கள உத்தரவிட வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் கோரிக்கை விடுக்கின்றோம்.
மேலும் வருவாய் ஈட்டும் நபரை இழந்து வாடும், வாழ்வறியாது நிற்கும் இளம் ஒளிப்பதிவாளர் சங்கர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் மற்றும் நேஜயூ குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.