சென்னை :
கள்ளக்குறிச்சியில் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் முதன்மை செய்தியாளர் திரு. தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்பட கலைஞர் திரு. அஜித் குமார் ஆகியோர் மீது சமூக விரோதிகள் கொலை வெறி தாக்குதல் குறித்து நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் இதழின் முதன்மை செய்தியாளர் திரு. தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் திரு. அஜித் குமார் உள்ளிட்டோர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் பலத்த காயங்களுடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைந்து பணியை தொடர வேண்டுகின்றோம்
உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சியின் குரல்வலையை நெரிக்கும் வகையில் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களை சமூக விரோதிகள் தொடர்ந்து தாக்கப்படுவதும், அவதூறாக பேசுவதும், காவல் துறையினரால் கைது செய்யப்படுவதும் கண்டனத்துக்குரியதாகும்.
நக்கீரன் முதன்மை செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞர் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாக அடையாளம் கண்டு பிணையில் வெளிவர முடியாத சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தமிழக அரசையும் காவல்துறையையும் நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் கோரிக்கை வைக்கிறது.
இவ்வாறு நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் இணைச்செயலாளர் சி கே ராஜன் (9488471235) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.