வேலூர்:
மூத்த பத்திரிகையாளரான குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் (வயது 56) இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகை உலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் டாக்டர் கா.குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
குமுதம் வார இதழில் பல ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர் ப்ரியா கல்யாணராமன். இவரது இயற்பெயர் ராமச்சந்திரன். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்தவர் ப்ரியா கல்யாணராமன். அவரது மனைவி ராஜ சியாமளா ஒரு எழுத்தாளர். ப்ரியா கல்யாணராமனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குமுதம் வார இதழில் தமது 21 வயதிலேயே பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கினார். குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.யால் பத்திரிகை உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டவர் ப்ரியா கல்யாணராமன்.
இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கா.குமார் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில்:
மூத்த ஊடகவியலாளரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏராளமான நாவல்களை எழுதிக் குவித்தவர். குமுதத்தில் பல தொடர்களை நீண்டகாலம் எழுதியவர். ஆன்மீக துறையில் பல நூல்களை எழுதியிருக்கிறார். ப்ரியா கல்யாண ராமன் எழுதிய சிறுகதைகள், நாவல்கள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களுக்கு நேரில் சென்று அதன் சிறப்புகளை எழுதியவர்கள் ஒருசிலர்தான். அவர்களில் ப்ரியா கல்யாணராமனும் ஒருவர்.
முப்பதாண்டுகளாக குமுதம் இதழில் பணியாற்றி வரும் அவர், பல நூல்களை எழுதியிருப்பதுடன், பல எழுத்தாளர்களையும் ஊக்குவித்தவர் என்பதை ஊடக நண்பர்கள் நன்கறிவார்கள். குமுதம் இதழைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி வந்ததில் இவரது பங்கு அளப்பரியது.
கடந்த 30 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து திகழ்ந்தவர்... சென்னையில் இன்று மாரடைப்பால் அவர் காலமானார் என்ற செய்தி அறிந்து மனம் உடைந்தேன்.. மிகுந்த வேதனையடைந்தேன்.
அவரது திடீர் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும், குமுதம் நிறுவனப் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு இரங்கல் செய்தியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார்.