சென்னை, மே 5, 2018:
உறவினர் விசேஷத்துக்குச் சென்று திரும்பிய செய்தியாளர் ஸ்ரீதர் என்பவரை, அவர் மனைவியின் கண் முன்னே தலைமை காவலர் சக்திவேல் என்பவர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செய்தியாளர் நண்பர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் (03-05-2018) அதிகாலை 4 மணிக்கு மனைவி சரண்யா மற்றும் குழந்தைகள் சஞ்சை, சந்துரு ஆகியோருடன் சேலத்தில் உறவினர் சுபநிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, தருமபுரிக்குத் தனது காரில் திரும்பியுள்ளார்.
அப்போது பெரும்பாலையில் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்த தலைமைக் காவலர் சக்திவேல், செய்தியாளர் ஸ்ரீதர் வந்த காரை மறித்து சோதனை செய்து, “எங்கிருந்து வருகிறீர்கள்” என்று விசாரித்துள்ளார். அதற்கு செய்தியாளர் கூறியதாவது; சார் நான் உள்ளூர் செய்தியாளர் என்றும் தன் பெயர் ஸ்ரீதர் என்றும் தலைமை காவலர் சக்திவேல் கேள்விக்கு, செய்தியாளர் பணிந்து பதிலளித்தார்.
நீதான் அந்த ஸ்ரீதரா..? நான் லஞ்சம் வாங்கியதாகத் தருமபுரி எஸ்.பி-யிடம் தகவல் சொன்னவன் நீதானா, உன்னைத்தான் கடந்த ஒரு வாரமாகத் தேடிட்டு இருந்தேன் என்று காரில் இருந்த ஸ்ரீதரை வெளியே இழுத்துப்போட்டு கல்லால் தாக்கி, பூட்ஸ் காலால் மிதித்துள்ளார் காவலர் சக்திவேல். மனைவி குழந்தைகள் முன்பு நடந்த இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே செய்தியாளர் ஸ்ரீதர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மனைவி சரண்யா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளார். தற்போது செய்தியாளர் ஸ்ரீதர் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும்
“மனித உரிமைகள் சாசனம் - பகுதி 19” இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
“பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தை வலிமையாக்குகிறது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி, மே 3ம் தேதி பத்திரிகை சுதந்திர நாள் வாழ்த்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், உலக பத்திரிகை சுதந்திர அட்டவணை&-2018, சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில் 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திரத்தை ஆய்வு செய்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் இந்தியா 138-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்தியா 2 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்தான் காரணம் என்று ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்-அவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இதை உறுதிபடுத்தும் வகையில் பத்திரிகை சுதந்திர நாளான மே 3ம் தேதி அன்றே செய்தியாளர் ஸ்ரீதரை கொலைவெறிதாக்குதல் நடத்திய சம்பவம் ஜனநாயக வெட்க கேடானது.
மணல் கொள்ளை, சட்ட விரோத செயலுக்கு துணைபோன தலைமை காவலர் சக்திவேல் பற்றி, காவல் துறை கண்காணிப்பாளார் பண்டி கங்காதாரரிடம் செய்தியாளர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்தார். இது குறித்து எஸ்.பி. பண்டி கங்காதார், தலைமை காவலர் சக்திவேலை அழைத்து கண்டித்து அனுப்பினார்.
இதனை மனதில் வைத்துக்கொண்டு, செய்தியாளரின் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையிலும், பழிவாங்கும் நோக்கிலும் காவல் காக்க வேண்டிய காவல் துறையே காவு வாங்கும் செயலான கொலை வெறிதாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற காவலரின் செயலுக்கு 6 மாத பணியிடை நீக்கம் சரியான தீர்வு அல்ல.
தலைமை காவலர் சக்திவேலை பணி நீக்கம் செய்து, உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணியிடை நீக்கம் செய்வதால் தான் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெறாது. பத்திரிகையாளர்கள் மீது காவலர்களின் தாக்குதல் தொடர்கதையாக உள்ளது.
“காவல்துறை உங்கள் நண்பன்” என்பது வெறும் எழுத்து வடிவில் மட்டுமே உள்ளது. பொது மக்களை “காவல் காக்கும் காவலரே காவு வாங்கும்” செயலில் ஈடுபடுவது மிகவும் வன்மையாக கண்டிக்க தக்கது.
காவல் துறையில் இதுபோன்ற அராஜக அடக்கு முறைகள், ஒடுக்குமுறைகள் வந்துவிட்டால் நிலைமை விபரீதமாகி விடும். இது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். கொலை வெறி தாக்குதல் நடத்திய தலைமை காவலர் சக்திவேல் மீது காவல் துறை உடனடியாக பணி நீக்கம் செய்து, கைது நடவடிக்கை எடுக்கவில்லையனில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.. இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.