அச்சத்தில் உறைந்து போயுள்ள தொலைக்காட்சிகள்!
வேலூர், ஏப்.3, 2018:
தமிழக அரசுக்கு எதிராக செய்தி ஒளிபரப்பினால் செய்தியை முடக்கும் பணியில் அரசு கேபிள் டிவி நிறுவனம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதனால் அச்சத்தில் உறைந்துபோயுள்ளன தனியார் தொலைக்காட்சிகள்.
அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை அரசு கேபிள் நிறுத்திவிடும் என்று தமிழக அரசின் தரப்பில் இருந்து தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தொலைக்காட்சி நிறுவனங்கள் குமுறுகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சாவூரில் உண்ணாவிரதம் இருந்தார் டிடிவி.தினகரன். அந்த நிகழ்வை ஜெயா ப்ளஸ் செய்தி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்தது. அதனால் அரசு தரப்பு எரிச்சலடைந்தது. உடனடியாக ஜெயா ப்ளஸ் ஒளிபரப்பை அரசு கேபிள் நிறுத்தியது.
தமிழகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு மையங்களுக்கு (எம்எஸ்ஓ) சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து மார்ச் 24ம் தேதி வாய்மொழியாக ஓர் உத்தரவு சென்றுள்ளது. அதில் ஜெயா ப்ளஸ் சேனலின் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தும்படி சொல்லியுள்ளனர். அதையடுத்து, தமிழகம் முழுவதும் ஜெயா ப்ளஸ் சேனல் ஒளிபரப்பை கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் நிறுத்தினர்.
அரசு கேபிள் செட்டாப் பாக்ஸில் 136-வது அலைவரிசையில் ஜெயா ப்ளஸ் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. ஜெயா ப்ளஸ் ஒளிபரப்பப்படுகிறது. அனலாக் என்று சொல்லப்படும் டிஜிட்டல் அல்லாத கேபிள் அலைவரிசையில் எஸ் பேண்ட் அலைவரிசையில் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வந்தது.
அதுவும் திடீரென்று நிறுத்தப்பட்டது. இரண்டு நாட்களுக்கு பிறகு ஜெயா ப்ளஸ் சேனலை மீண்டும் ஒளிபரப்பு செய்யும் படியும், கடைசி அலைவரிசையாக அதை ஒளிபரப்பு செய்யுமாறும் சென்னையில் இருந்து உத்தரவு போயிருக்கிறது.
இதனால் செட்டாப் பாக்ஸில் 831வது அலைவரிசையிலும் அனலாக் ஒளிபரப்பில் எஸ் பேண்ட் அலைவரிசையில் இருந்து கடைசி சேனலாக யூபேண்ட் அலைவரிசையிலும் ஜெயா ப்ளஸ் ஒளிபரப்பாகி வருகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரின் பேட்டிகளை வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கு சொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புதிய நியூஸ்7 சேனல் ஒன்று ஆர்.கே.நகர் தொகுதி குறித்த கருத்துகணிப்பில் ஆளும்கட்சிக்கு எதிரான கணிப்பை வெளியிட்டதால் அமைச்சர் ஒருவரின் அலுவலகத்தில் இருந்து அந்த சேனலுக்கு மறைமுக மிரட்டல் போயுள்ளது. அரசு கேபிளிலிருந்து அந்த சேனல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து அரசு கேபிள் மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன் கூறுகையில், தினகரன் உண்ணாவிரதம் இருந்த தினத்தில் தஞ்சாவூரில் ஜெயா ப்ளஸ் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. டெக்னிகல் பிரச்னையாக இருக்கலாம். நான் ஒரு வாரம் விடுமுறையில் இருந்தேன் என்றும் அவர் பதிலளித்தார். ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை. அப்படி ஓர் உத்தரவு எனக்கு எங்கிருந்தும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உள்ளது உள்ளவாறு அள்ளித்தரும் செய்த சேனல்களை முடக்க செய்தித்துறை அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார் என்று அதிர்ச்சி தகவல்கள் சென்னையில் உலா வர ஆரம்பித்துள்ளது. கையில் ஆட்சி மட்டும் இருந்தால் போதாது. இன்றைக்கு ஆட்சியை விட முக்கியது சேனல் என்றாகிவிட்டது. அரசியலில் வளர சேனல் அவசியமாகிறது. செய்திகளை சுதந்திரமாக வெளியிட விடாமல் தடுக்கப்படுவதாக தனியார் சேனல்கள் புகார்களை கூறி வருகிறது.
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாக இதுபோன்ற விஷயங்கள் மாறி வருகின்றன. செய்தி துறையே செய்தியை முடக்கும் பணியில் ஈடுபடுவது விரும்பத்தக்க காரியமல்ல. இதுவே அபாயகரமானதாக அமையும். இனி வரும் காலங்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.