Search This Blog

Translate

நக்கீரன் கோபால் கைது... பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுவது அடக்குமுறையின் உச்சகட்டம்!

மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை..

நே. ஜ. யூனியன் தேசிய தலைவர் கடும் கண்டனம்!

வேலூர், அக். 10, 2018: 

தமிழக ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்று நேற்று காலை கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை விடுவித்து சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தமிழக ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்று நேற்று காலை நக்கீரன் கோபாலை கைது செய்தனர். இது பத்திரிகை சுதந்திரம் பறிக்கப் படுவதற்கு முன்னோட்ட மாக உள்ளதுடன் அடக்குமுறையின் உச்ச கட்டமாக அமைந்துள்ளது. இதற்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவிகளை தவறான வழியில் நடக்க வற்புறுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி, தனக்கு ஆளுநரைத் தெரியும் என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுதொடர்பாக மூத்த பத்திரிக்கை ஆசிரியரான நக்கீரன் கோபால், ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நக்கீரன் கோபாலை, தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை கைது செய்தனர். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை போலீஸ் கைது செய்தது. 

மேலும் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124இன் கீழ் ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கருத்து சுதந்திரத்து க்கு எதிரானது மற்றும் ஜனநாயக படுகொலை. இதுபோன்ற பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான இச்செயல் குற்றங்களை பெருக்க வழி செய்யுமே தவிர பாதுகாக்க அல்ல. 

இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் ஒவ்வொரு  இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிப்படுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.ஆனால், பத்திரிகையாளருக்கே கருத்துரிமை எழுத்துரிமை பறிக்கப்படுவதுதான் இந்திய அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயலாகும். 

இந்நிலையில், நக்கீரன் கோபாலை, சென்னை எழும்பூர் 13ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணையில் அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் கூறியதாக நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நக்கீரன் கோபாலை இந்திய தண்டனைச் சட்டம் 124இன் கீழ் கைது செய்திருப்பது செல்லாது.  

இந்த சட்டப் பிரிவில் ஆளுநரை பணி செய்ய  விடாமல் தடுத்ததாக கூறப்படுவதற்கு முகாந்திரம் இல்லை. அதேபோல் ஆளுநர் தன்னுடைய புகாரில், கோபால் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரவில்லை.  இத்தகைய வழக்குகளில் கைது செய்வது என்பது  தவறான முன்னுதாரணம் ஆகி விடும். 

இந்த வழக்கிற்கும் குறிப்பிட்ட சட்டப் பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே கோபாலை நீதிமன்ற காவலின் கீழ் சிறைக்கு அனுப்புமாறு உத்தரவிட முடியாது. இவ்வாறு தெரிவித்த நீதிபதி கோபிநாத் நக்கீரன் கோபாலை விடுதலை செய்து உத்தரவிட்டார். 

நீதித்துறையின் இத்தீர்ப்பால் கருத்து சுதந்தரத்தை, பத்திரிகை சுதந்தரத்தை காத்து நிலைநாட்டியதற்கு நன்றி தெரிவித்தார். ஜனநாயகத்தின் உரிமையை நிலைநாட்டிய நீதிதுறையின் இச்செயல் போற்றுதலுக்குரியது. 

முகாந்திரம் இல்லாமல் கைது செய்வது காவல் துறையின் கண்ணியத்துக்கு உகந்ததாக இல்லை. தனது கையில் உள்ள சட்டத்தை வளைக்க காவல் துறை முயற்சிக்க கூடாது. பத்திரிகையாளர்கள் மேல் உடனடியாக கைது நடவடிக்கை  என்பது ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் செயலாகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் தடுப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என்பதற்கு இந்த கைது நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணமாகும். 

நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளதற்கு எனது என்ஜேயூ சார்பில் நன்றியை காணிக்கையாக்குகிறேன். பத்திரிகைகளின் கைகள் கட்டப்பட்டால் சமூக விரோதிகள் பெருகி விடுவார்கள். நாட்டில் சட்டம் ஒழுங்கு கூட தலைவிரித்து ஆட தொடங்கிவிடும். இனி வரும் காலங்களில் விசாரித்து புகாரில் உண்மை தன்மை இருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் காவல் துறைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !