சென்னை, மார்ச் 22, 2018:
தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் இருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் அகில இந்திய தலைவர் கா.குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருபவர்கள் ரகு மற்றும் கணேஷ் என்னும் காவலர்கள். இவர்கள் இருவரும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுக்க நேற்று வந்திருந்தனர். புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த இருவரும் அலுவலக வாசலில் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த டிஜிபி அலுவலக் காவல் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் மயிலாப்பூர் போக்குவரத்து காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்களைப் பாதுகாப்பாக மயிலாப்பூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருவதும், சமீபத்தில் அவர்கள் இருவரும் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
தங்கள் மேல் தவறு இல்லாத போதும், பழி வாங்கும் நோக்கத்துடனும், ஜாதி ரீதியான கண்ணோட்டத்துடன் மேலதிகாரிகள் நடந்து கொள்வதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாகவே புகார் கொடுக்க வந்தவர்கள் பின்னர் தற்கொலைக்கு முயன்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஜாதி ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை கண்ணியமிகு காவல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மறந்து விட்டனர். தற்போது காவல் துறையில் பணிக்கு சேரும் இளைஞர்கள் குறைந்தபட்சம் பட்டதாரிகளாகவே உள்ளனர். இவர்கள் ஐயா என்று கூப்பிடவே சிரமப்படுகின்றனர்.
இதிலும் சாதி ரீதியான பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் அவர்களை தனிமைப்படுத்துவது, ஒதுக்குவது, ஓரங்கட்டுவது தீண்டாமை கொடுமையாகும். இதுபோன்ற செயலில் எந்த காவல் துறை அதிகாரி ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவர் ராஜேந்திரன் உடனடியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும்.
காவல் துறையில் இதுபோன்ற சாதி ரீதியான அடக்கு முறைகள், ஒடுக்குமுறைகள் வந்துவிட்டால் நிலைமை விபரீதமாகி விடும். இது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தவறு செய்தவர்கள் மீது காவல் துறை இன்னும் ஓரிரு நாட்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லையனில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.. இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.