நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர்
டாக்டர் கா.குமார் கடும் கண்டனம்!
வேலூர், நவ.13, 2018:
செய்தியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடும் பணியில் நிழல் உலக தாதாக்கள் அண்மை காலங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவருமான கா.குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என சொல்லப்படும் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகம் ஆகும். ஊடகமே மற்ற மூன்று தூண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக செயல்படும் முக்கிய பங்கை வகிக்கின்றது. செய்தியாளர்கள் உண்மையை உலகுக்கு வெளிக் கொண்டு வரும் நபர்களாவார்கள். சமூதாயத்தில் நடக்கும் அநீதிகளையும், மக்களின் குறைகளையும், தேவைகளையும் அரசுக்கு கொண்டுசெல்லும் ஒரு பாலமே பத்திரிகைத்துறை. சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை அவ்வப்போது காவல்துறைக்கு கொண்டு சேர்க்கும் தலையாய பணியை செய்வதும் பத்திரிகைத்துறைதான் என்று சொன்னால் அது மிகையாகாது. நான்கு தூண்களில் மிக முக்கியமான தூணாக செயலாற்றுவது பத்திரிகைத்துறையே...!.
பத்திரிகையாளரை மிரட்டுவது ஜனநாயக விரோதச் செயல்! இவர்கள மீது பாயுமா குண்டர் சட்டம்?
சமுதாயத்தில் உலவும் ஊழல் பெருச்சாளிகள், சட்டத்திற்கு எதிராக செயல்படுவோர், பொதுமக்களை மிரட்டி பிழைப்போர், சமூக விரோத ச் செயல்களில் ஈடுபடுவோர்கள் போன்ற புல்லுருவிகளை தோலுரித்து காண்பித்து செய்தி வெளியிடப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சிலர் சம்மந்தப்பட்ட செய்தியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடும் பாணியில் பேசியுள்ளனர். அவர் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தாங்கள் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், தங்களை எந்த அரசும் கட்டுப்படுத்த முடியாது என்றும், நாங்கள் அரசுக்கும் மேலான தனி அரசு, தனி விங் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபோன்று செய்தி வெளியிட்டால் உங்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரைகூவல் விடுத்துள்ளார். சமூகத்திற்காக செயல்படும் பத்திரிகையாளரை, சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவோர் மிரட்டுவது கேலிக்கூத்தாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் எங்கள் பாக்கெட்டுக்குள் என்றும் கொக்கரித்துள்ளார். இப்படி செய்தியாளர்களை மிரட்டிப் பார்க்கும் நிழல் உலக தாதா யார்? என்பது தெரியவில்லை. இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவரா? அல்லது தீவிரவாதிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரா? நக்சலைட் பிரிவைச் சேர்ந்தவரா? என்பது புரியாத புதிராக உள்ளது.
நாங்கள் தான் தனி ராஜாங்கம் என்பதை போன்றும், காவல் துறையே இவர்கள் கட்டுப்பாட்டில் இயங்குவது போன்றும் அரைகூவல் விடுத்துள்ளனர். இந்த அரைகூவல் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், காவல்துறையையும் இழிவுபடுத்துவதாகும். இதுபோன்று, நான்தான் தனி அரசு, காவல்துறை என் கையில் என அரைகூவல் விடுக்கும் விஷக்கிருமிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து காவல்துறை கண்ணியமானதுதான் என்பதை உணர்த்தவேண்டும். இந்த பிரச்சனையில் காவல் துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன் தலையிட்டு அந்த விஷக்கிருமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
செய்தியாளர்களை மிரட்டும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் கொடுத்தது யார்?. இந்த நிழல் உலக தாதாவை பின்னிருந்து இயக்குபவர் யார்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் உள்ளது. இதுபோன்ற விலாசம் இல்லாத நபர்கள் பின்னணியில் செயல்படும் நபர்களை பூண்டோடு வேரறுக்க வேண்டும். செய்தியாளர்களை மிரட்டுவோரை என்ஜேயூ பார்த்து கொண்டு சும்மா இருக்காது. மாறாக அவர்களை கைது செய்யும் வரை ஓயாமல் போராட்டம் நடத்த ஆயத்தமாகி விடுவோம். இதுபோன்ற விரும்பத்தகாத வார்த்தைகளை பேசி செய்தியாளர்களை மிரட்டுவது ஆரோக்கியமான போக்கு அல்ல. அந்த மர்ம நிழல் மனிதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்.
பத்திரிகையாளர்களுக்கு ஒன்று என்றால் நான் பார்த்து கொண்டு இருக்க மாட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். என்ஜேயூ மட்டுமல்லாமல், மற்ற பத்திரிகையாளர்கள் யூனியன்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்து கொள்கிறேன். ஆதலால் தமிழகத்தில் செய்தியாளர்களுக்கு அசாதாரண சூழல் நிலவுவதால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் தமிழக அரசும், காவல் துறையும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவருமான கா.குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
"குண்டர் சட்டத்தில்
கைது செய்ய
காவல்துறை இவர்கள் பிடியிலா?"