கடலூர், ஜன.11, 2024 :
கடலூர் மாவட்ட நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் TMC அரங்கத்தில் 11.01.2024 - வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் திரு.கோ.கனகவேல் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் திரு.தி.ராகுலன், மாவட்ட பொருளாளர் ஐ.நாகமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் திரு.சீனுவாசன், மாவட்ட துணை செயலாளர் திரு.தேவராஜ் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
2024 ஆம் ஆண்டிற்காண முதல் கூட்டத்தில், இவ்வாண்டுக்கான சங்கத்தின் செயல்பாடுகள், சங்க வளர்ச்சி, உறுப்பினர்களுக்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில்...
முதல் நிகழ்வாக மறைந்த நமது சங்க உறுப்பினர் திரு.பவுல்ராஜ் அவர்களுக்கு மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் சங்க வளர்ச்சிக்கான தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
அதில் செய்தியாளர் திரு.ரகுநாதன் பேசுகையில்:-
பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சிறு பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. பெரிய பத்திரிகையாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படுகின்றது அதை மாற்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் முன்னுரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
செய்தியாளர் திரு.ராசமச்சேந்திரசோழன் பேசுகையில்:
பத்திரிகையாளர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். தனியார் நிகழ்ச்சிகளை சங்க உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரியபடுத்துங்கள் என்றார்.
செய்தியாளர் திரு.சீனுவாசன் பேசுகையில்:
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக்கு செய்தியாளர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை சங்கம் பெற்றுத்தர வேண்டும் என்றார்.
செய்தியாளர் திரு.தேவராஜ் பேசுகையில்:-
மாதம் ஒருமுறை அல்லது இருமுறை மாவட்ட கூட்டம் நடத்தப்பட வேண்டும் அக்கூட்டங்களை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்த வேண்டும். அப்படி நடத்தும் போது செய்தியாளர்களுக்குள் அறிமுகமும், ஒற்றுமையும் ஏற்படும் என்றார்.
செய்தியாளர் திரு.தனுஷ் பேசுகையில்:-
பத்திரிகையாளர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் சங்கம் பங்கெடுக்க வேண்டும். தவறும் பட்சம் பிறிதொரு நாளிலாவது அனைவரும் அவர்களின் இல்லம் சென்று ஆறுதல் சொல்ல வேண்டும்.
மாவட்ட செய்தியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தாலுக்கா செய்தியாளர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
செய்தியாளர் திரு.குமரன் பேசுகையில்:-
மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்த ஆவண செய்ய வேண்டும். பெரிய, சிறிய பத்திரிக்கையாளர் என்கின்ற பேதம் பார்க்கக் கூடாது. பத்திரிக்கையாளர்கள் முடிந்தவரை ஒரே நிறுவனத்தில் பணி செய்ய முயற்சி செய்யவேண்டும். விருத்தாசலம் டோல் பூத்தில் மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சலுகை வழங்க மாவட்ட சங்கம் ஆவன செய்ய வேண்டும் என்றார்.
செய்தியாளர் திரு.பாலமுருகன் பேசுகையில்:-
இதுவரை எந்த பத்திரிகையாளர் சங்கமும் பத்திரிகையாளர் நலனில் அக்கறை காட்டவில்லை நமது NJU சங்கம்தான் தனது சொந்த செலவில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.. அதற்கு முதல் நன்றி.
அரசு பத்திரிகையாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்தும் இதுவரை எந்த நலத்திட்டமும் உதவிகளும் பத்திரிக்கையாளர்கள் பெறவில்லை என்றார்.
செய்தியாளர் திரு.பிரேம்ஆனந்த் பேசுகையில்:-
சங்கத்தின் பெயரை பயன்படுத்தி யாரும் தவறான செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதுவரை எந்த பத்திரிக்கையாளர் சங்கமும் செய்யாத அளவில் நமது NJU சங்கம் செய்தியாளர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு செய்துள்ளது சிறப்பானதாகும்.
சங்கத்தின் சார்பில் தனியாக whatsapp குழு மற்றும் youtube குழு ஒன்று ஆரம்பிக்க வேண்டும் அதில் உள்ளூர் செய்திகளை பகிர வேண்டும். மேலும் சங்க உறுப்பினர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்வதோடு அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்.
அதற்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 100 மாவட்ட சங்கத்திற்கு வழங்க வேண்டும். அந்த தொகையை நமது சங்க உறுப்பினர்கள் சுக, துக்க நிகழ்ச்சிகளில் ஊக்க தொகையாக கொடுக்கலாம் என்றதோடு அவரே முதல் தவணைதொகையை செலுத்தி துவக்கிவைத்தார்.
செய்தியாளர் திரு.வெங்கடேசன் பேசுகையில்:-
மாவட்ட சங்கம் சிறப்பாக செயல்படுகின்றது. மாவட்ட கூட்டத்தை மாவட்டத்தின் மற்ற ஊர்களிலும் நடத்த வேண்டும் என்றார்.
செய்தியாளர் திரு.மதியழகன் பேசுகையில்:-
சங்க உறுப்பினர்களின் அனைத்து கருத்துகளும் என் கருத்தாக கருதுகிறேன் என்றார்.
மூத்த பத்திரிகையாளர் திரு.சி.எஸ்.முருகன் பேசுகையில்:
சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை அதிகமாக இணைக்க வேண்டும். சங்க வளர்ச்சிக்கு நான் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்றார்.
மூத்த பத்திரிக்கையாளர் திரு.அன்பன் சிவா என்கிற சிவப்பிரகாசம் பேசுகையில்:-
மாவட்ட சங்கம் சிறப்பாக செயல்படுகிறது வாழ்த்துக்கள். மாவட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் பொறுப்பாளர்களின் பெயர், விலாசம், தொலைபேசி எண், நிறுவனம் என அனைத்து தகவலுடன் கூடிய புத்தகத்தை தயாரித்து வெளியிட வேண்டும் என்றதோடு சங்க வளர்ச்சிக்கு மேலும் பல்வேறு செயல் திட்டங்களை கூறினார்.
அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த மாநில இணைச் செயலாளர் திரு.ஜி.கே.ராஜா மாநில துணைத்தலைவர் திரு.கௌ.செ.குமார் ஆகியோர் உரையாற்ற தொடங்கினர்.
மாநில இணைச் செயலாளர் திரு.ஜி.கே.ராஜா பேசுகையில்:-
மாநில சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளை பற்றி பேசினார். மாநில சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் தற்போதைய செயல்பாடுகள் உறுப்பினர் நலனுக்காக மாநில சங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விரிவாக எடுத்து வைத்தார்.
மாநில துணைத்தலைவர் திரு.கௌ.செ.குமார் பேசுகையில்:-
பத்திரிகையாளர் சங்கங்களின் செயல்பாடுகளையும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பத்திரிகையாளர் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தாக கொண்டு செயல்படும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியனின் சிறப்பான பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பத்திரிகையாளர்களின் பணி மற்றும் அவர்களின் உரிமை பற்றி அவர் பேசியது இளம் செய்தியாளர்களுக்கு உத்வேகமாக இருந்தது.
சங்க உறுப்பினர் செய்தியாளர் திரு.பிரேம்ஆனந்த் கூறிய செய்தியாளர்களின் சுக,துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு நிதி அளிக்க உறுப்பினர்கள் மாத ரூபாய் 100 ஐ மாவட்ட சங்கத்திற்கு வழங்க வேண்டும் அத்தொகையை உறுப்பினர் சுக,துக்க நிகழ்வுகளில் நிதியாக அளிக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்று பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததோடு திரு.பிரேம் ஆனந்த் தனது முதல் தொகையை செலுத்திய உடன் ஏனைய பெரும்பான்மையான பத்திரிகையாளர்கள் தங்களுடைய தவணைத் தொகையை உடனே செலுத்தினர்.
இறுதியாக மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு.சு.விசுவநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.