வேலூர்:
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோயில் பதிப்பாசிரியர் டாக்டர் வெங்கடபதி(91) மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் டாக்டர் கா.குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
![]() |
டாக்டர் வெங்கடபதி |
.இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான கா.குமார் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பததாவது:
Dr. K. Kumar, NJU President |
தினமலர் நிறுவனர் திரு.டி.வி.ராமசுப்பையரின் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோயில் பதிப்பாசிரியரும், தலைசிறந்த வானூர்தி பொறியாளருமான டாக்டர் வெங்கடபதி இன்று (11-04-2022) காலை 7:20 மணிக்கு மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தினமலர் நிறுவனர் திரு. ராமசுப்பையரின் 5 மகன்களில் மூத்த மகனாக பிறந்தவர் டாக்டர். வெங்கடபதி அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் தழுவிய மகாதேவர் கோயில் என்ற கிராமத்தில் பிறந்தார். நாகர்கோவில் எஸ்.எல்.வி. பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்ததும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.எஸ்சி., படித்தார்...
தொடர்ந்து சென்னை எம்.ஐ.டி.,யில் ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் முடித்தார். அதே காலக்கட்டத்தில் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் அங்கு படித்தார். பின்னர் வாரங்கல்லில் உள்ள ரிஜினல் எஞ்சினியரிங் கல்லூரியில் ( ஆர்.இ.சி) உதவி பேராசிரியராக பணிபுரிந்தார்.
அடுத்து 1956ல் அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் எஞ்சிஜினியரிங்கில் மாஸ்டர் டிகிரி முடித்தார். அதை முடித்ததும் போயிங் கம்பெனியில் டிசைனிங் துறையில் சிறிது காலம் பணியாற்றினார்.
மேற்கொண்டு பி.எச்டி., செய்ய நினைத்த அவருக்கு அமெரிக்காவில் அதற்குரிய பேராசிரியர் இல்லாததால் ஜெர்மனி சென்றார்.
அங்கு ஹானோவர் பல்கலைக்கழகத்தில் அங்குள்ள வழக்கப்படி ஓராண்டு ஜெர்மனி மொழி கற்றபின், ஸ்ட்ரக்சரல் எஞ்சிஜினியரிங்கில் பிஎச்டி., முடித்து சில ஆண்டுகள் ஒரு எஞ்சினியரிங் நிறுவனத்தில் பணி புரிந்தார்.
அந்த நிறுவனம் வளைகுடா பகுதியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததால் அங்கும் சில காலம் பணி புரிந்தார்.
தமிழகத்தில் எண்ணூர் மற்றும் மேட்டூரில் பவுண்டேஷன் நிறுவனம் அமைத்திருந்த பவர் பிளான்ட்டுகளில் கன்சல்ட்டிங் டிசைனிங் எஞ்சினியராக பணியாற்றினார்.
1970களில் திருச்சி பிஎச்இஎல்.,லில் கன்சல்டிங் டிசைனிங் எஞ்சினீயராக இருந்தார்.
1972- 73ல் தினமலர் பங்குதாரர் ஆனார்.
இவருக்கு 3 மகள்கள் பேரன், பேத்திகள் உள்ளனர். இவருடைய மனைவி கடந்த 1997ல் காலமானார். சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த டாக்டர் வெங்கடபதி இன்று காலை 07:20 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் மறைந்தார்.
சிறந்த கல்வியாளர், வானூர்தி பொறியாளர், கன்சல்டிங் டிசைனர் என பன்முகத் திறமை கொண்டவர்... போற்றுபடியாகவும், எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்தவர் ஆவார். அவர் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தினமலர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு இரங்கல் செய்தியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார்.