Search This Blog

Translate

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... செய்தியாளர்களுக்கு அட்டை வழங்கினார் முதல்வர்

 சென்னை :

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெறவேண்டும் என்ற முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ  இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக  இணைத்து, காப்பீட்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.

அதிக சிகிச்சை முறைகளுடன் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து செயல்படுத்திட  யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10-1-2022) வழங்கினார். முதலமைச்சர்  முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ.1,248.29 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. 

முதலமைச்சரின் விரிவான மருத்துவத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து 23.09.2018 அன்று முதல்  செயல்படுத்தப்படுகின்றது. 

தற்போது செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்  காப்பீட்டுத் திட்டம் இம்மாதம் முடிவு பெறுகிறது.

மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில்,  5 ஆண்டுகளுக்கு  மேலும் அதிக சிகிச்சை முறைகளுடன், பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய திட்ட பயனாளிகள் அதிகபட்சம் ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு ரூபாய் 5 இலட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என்றும், பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் வண்ணம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு எந்தவித உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்’ என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், ஏழை எளிய மக்கள் கூடுதல் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாயிலிருந்து 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு 16.12.2021 அன்று அரசாணை வெளியிட்டது.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.1.2022) சென்னை, எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 11.01.2022 முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, பொதுத் துறை நிறுவனமான  யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு அதற்கான ஆணையினை வழங்கினார்கள். அத்துடன் முதலமைச்சர்  அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ.1,248.29 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 11 தொடர்  சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள் மற்றும் 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட 714 அரசு மருத்துவமனைகள் மற்றும் 886 தனியார் மருத்துவமனைகள்,  என மொத்தம் 1600 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். அத்துடன் 86  கூடுதல் சிகிச்சை முறைகள் தற்போது செயல்படுத்தப்படும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.   இத்திட்டத்தின் வாயிலாக 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டொன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு வசதி பெற முடியும்.

செய்தித் துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ  இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களை  ஆண்டு வருமான உச்சவரம்பின்றி,  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக  இணைக்கவும்,  மேலும், இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறையிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் பட்டியல்களைப் பெற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவும் அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி  துறையினால் 2020-2021 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர் அடையாள அட்டை உடைய 1,414 செய்தியாளர்களின் குடும்பங்கள்  முதல்  கட்டமாக இவ்வரசாணையின்படி இத்திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, முதலமைச்சர் அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட 10 செய்தியாளர்கள் / பருவ இதழ் செய்தியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அடையாள அட்டைகளை வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் முனைவர் பி. செந்தில் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவர் ச. உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் எஸ்.குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் நாராயணபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !