சென்னை, டிச.18-
20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால்: ₹10 லட்சம் 15 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால்: ₹7.5 லட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால்: ₹5 லட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால்: ₹2.5 லட்சம்
தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர் நலன் கருதி, பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால், அவர்கள் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, குடும்ப உதவி நிதி வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், 20 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ரூ.5 லட்சம்,
15 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ரூ.3.75 லட்சம், 10 ஆண்டுகள் என்றால் ரூ.2.50 லட்சம், 5 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ரூ.1.25 லட்சம் என குடும்ப நிதிஉதவி வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு குடும்ப உதவி நிதி இருமடங்கு உயர்த்தி டிச.18ம் தேதி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேர்ந்தால் பத்திரிகையாளர் குடும்ப நிதி உயர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இம்முடிவு பத்திரிகை யாளர்களின் வாழ்க்கை நலனுக்கு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. பணியில் இருக்கும் போது இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிநிதியை இருமடங்கு உயர்த்தியிருப்பது, அவர்களின் சேவைகளை மதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மகத்தான நடவடிக் கையாகும்.
இருமடங்கு உயர்வு
தமிழ்நாடு அரசு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர்கள் குடும்ப உதவிநிதியானது, 20 ஆண்டுகள் பணியாற்றி, பணியில் இருக்கும்போது இறந்தால் ரூ.10 லட்சமும், 15 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ரூ.7.5 லட்சமும், 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ரூ.5 லட்சமும், 5 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ரூ.2.50 லட்சமும் நடைமுறையில் உள்ள விதிகள்படி, பத்திரிகையாளர்கள் குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து செய்திதுறையினர் மற்றும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் மனமார்ந்த நன்றியினை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார்.
முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு
மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, பத்திரிகையாளர்களை காக்கும் பொருட்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களின் உழைப்பை அங்கீகரித்து பத்திரிகையாளர்களுக்கு பெருமை சேர்ந்துள்ளார்.
வழக்கு ரத்து
இதனை தொடர்ந்து ஜனநாயகத்தையும், பத்திரிகையாளர்களை காக்கும் பொருட்டு, திமுக தேர்தல் அறிக்கையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது போடப்பட்ட 90 வழக்குகளை திரும்ப பெறுவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டார்.
இதனை தொடர்ந்து 2021-ல் பத்திரிகையினர் குடும்பங்களை காக்கும் பொருட்டு, குடும்ப உதவி நிதி ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டிருப்பது பத்திரிகைத் துறையினருக்கு மேலும் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களின் நலனையும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, மேலும் பத்திரிகையாளர்களுக்கு குடும்ப உதவி நிதி இருமடங்கு உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று இந்த ஆட்சியில் இருமுறை குடும்ப உதவி நிதி உயர்த்தி பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எங்களையும் தன் குடும்பத்தில் ஒருவராக இணைத்து பெருமை சேர்த்த பத்திரிகை துறைக்கு உயிர் மூச்சாய் இருந்து, பத்திரிகை துறையினர் சார்பிலும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்கொள்கிறேன்.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.