Search This Blog

Translate

தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் மறைவு - என்ஜேயூ தேசிய தலைவர் குமார் இரங்கல்!

வேலூர், நவ.27, 2018:

தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான கா.குமார் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பததாவது: 

உண்மையான தமிழகனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற சமூக வலைதள பதிவுகள் தோன்றாத காலம் அது. தனக்கு கிடைத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பை துறந்து, தமிழ்மொழி குறித்த ஆய்வுகளை நடத்துவதற்காக 1953ல் இந்தியாவிலேயே தனது வேலையை அமைத்துக்கொண்டவர் ஐராவதம் மகாதேவன். அவர் தனது 88வது வயதில் நேற்று காலமானார்.

சிந்து சமவெளி வரலாறு, தமிழ் மொழியின் தொன்மை குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகளை நடத்தி, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த கல்வெட்டியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.

வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது இழப்புக்கு உலகம் முழுவதும் உள்ள பல தமிழ் அமைப்புகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, தினமணி பத்திரிகையின் ஆசிரியர், கல்வெட்டியியல் அறிஞர், வரலாறு ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தவர் ஐராவதம் மகாதேவன்.

சுமார் 50 ஆண்டு காலம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், சிந்துசமவெளிக் குறியீடுகளில் இருப்பவை தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்று அறிவித்தார். அதேபோல, பல ஆண்டு கால கல்வெட்டியியல் ஆய்வுகளின் அடிப்படையில், கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துருக்களை, பிராமி எழுத்துக்கள் என்று சொல்லாமல், தமிழ்பிராமி எழுத்துக்கள் என்றே சொல்லவேண்டும் என்ற கருத்தை நிறுவியவர்.

சிந்து சமவெளி ஆராய்ச்சி மற்றும் தொல்தமிழ் கல்வெட்டுகள் ஆகிய துறைகளில் ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு அளப்பரியது ஆகும்.

ஆராய்ச்சிகள் நடத்தும்போது, அதன் தீர்வுகளை நேர்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்ற கருத்துப்படி வாழ்ந்தவர் மகாதேவன். கிடைத்த தரவுகளுக்கு உண்மையாக இருந்தவர். கணினி பயன்பாடு குறித்து பலரும் அறிந்திராத காலத்தில் 1977ல் சிந்துசமவெளி குறியீடுகளின் எழுத்துக்கள் மற்றும் பொறிப்புகளை அட்டவணைப்படுத்தியவர். வரலாற்று ஆராய்ச்சிகளில் மறக்கமுடியாத ஆளுமையாக இருப்பவர். அவரது கடைசி யோசனை கூட சிந்துவெளி பற்றியதாகவே இருந்திருக்கும்.

உலகதமிழ் மாநாடுகளில் பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்ததோடு, சிந்துசமவெளி குறியீடுகளுக்கும், பண்டைத்தமிழ்ச் சொற்களுக்கும் இருக்கும் தொடர்பை நிறுவி திராவிட கருதுகோளுக்கு வலுசேர்த்தவர் மகாதேவன்.

பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் தொல்காப்பியர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற மகாதேவன் சிந்து சமவெளி ஆய்வு மையம் ஒன்றையும் நிறுவியுள்ளார்.

இப்படி பன்முகத் திறமை கொண்ட ஐராவதம் மகாதேவன் நேற்று (26.11.2018) உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். 

ஐராவதம் மகாதேவன் மிக நேர்மையானவர். பழந்தமிழ் இலக்கியத்தில் தோய்ந்த இவர், உலகப் புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஆவார். தமிழ் பிராமி கல்வெட்டுகளில் ஆராய்ச்சி செய்தவர்.

சிந்துசமவெளி எழுத்துகளுக்கும், திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவைச் சொன்னவர். ஐராவதம் மகாதேவனுக்கு, 2009-ம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அந்த விருதை முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார். இவர் ஸ்ரீவித்யாசாகர் கல்வி அறக்கட்டளை மூலம் பல உதவிகளை செய்து வந்தார்.

தொல்லியல் உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்ற ஐராவதம் மகாதேவன், கடின உழைப்பாளியும், அனைவரிடமும் எளிமையாகவும், அன்பாகவும் பழகக்கூடிய பண்பாளர். ஐராவதம் மகாதேவனின் மறைவு பத்திரிகைத் துறைக்கும், தொல்லியல் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஐராவதம் மகாதேவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தொல்லியல் மற்றும் பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மறைந்த ஐராவதம் மகாதேவன் போன்று ஒரு ஆசிரியரை தினமணி பெற்றது பெரும் பாக்கியமாகும். அப்படிப்பட்ட தமிழறிஞர்கள் தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் ஆற்றிய சேவையை என்றும் நாம் நினைவு கூற வேண்டும். தமிழக செய்தித்துறை சார்பில் அவருக்கு படத்திறப்பு விழா நடத்தி கௌரவிக்க வேண்டும். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான கா.குமார் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !