கடலூர், செப்.21-
அண்மையில் மரணம் அடைந்த பத்திரிகையாளர் எம். முருகானந்தத்தின் மகன் சதீஷுக்கு கல்வி உதவி தொகையாக ரூ 10,500ஐ நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசியத் தலைவர் கா.குமார் வழங்கினார். அத்துடன் கடலூர் மாவட்ட கிளையும், தன் பங்காக அண்ணாரது குடும்பத்துக்கு குடும்ப நல நிதியாக ரூ.10,000 வழங்கியது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த இந்த எளிய நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் இந்த உதவித் தொகைகளை முருகானந்தத்தின் குடும்பத்துக்கு வழங்கினார். அப்போது அவர் தன் பங்கிற்கு தன் சொந்த நிதியாக ரூ.5 ஆயிரத்தை சதீஷிடம் வழங்கி மென்மேலும் சிறப்பாக உயர்கல்வி பயில வாழ்த்தினார். அப்பொழுது ஆட்சியர் அன்புச்செல்வன் மனம் நெகிழ்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கடலூர் மாவட்ட வளர்ச்சிக்கு பத்திரிகையாளர் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். மறைந்த பத்திரிக்கையாளர் குடும் பத்துக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் உதவிக்கரம் நீட்டி ஆதரவாய் உடனிருப்பது பாராட்டுக்குரியது. பத்திரிக்கை மற்றும் ஊடகச் செய்திகளுக்கு முக்கியம் அளித்து நடவடிக்கை எடுத்து வருகின்றேன். விமர்சன செய்திகளையும் வரவேற்கிறேன். அதிலுள்ள உண்மைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்கிறேன்.
பத்திரிக்கையாளர்களின் பிரச்சனைகளை முழுமையாக உணர்ந்திருக்கிறேன். விரைவில் பத்திரிக்கையாளர் களுக்கு அரசின் இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். கடலூர் மாவட்டத்தில் கல்வியிலும், நீர் மேலாண்மையிலும் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்டச் செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தேசியத்தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் மனிதநேயப் பணிகளை குறிப்பிட்டு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்வில் சார் ஆட்சியர் சரயூ, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கடலூர் பத்திரிக்கையாளர் சங்கச் செயலாளர் பாலகிருஷ்ணன், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தேசிய இணைச்செயலாளர் கௌ செ. குமார், மாநில இணைச் செயலாளர் சி கே. ராஜன், மண்டல பொருளாளர் டாக்டர் ராஜமச்சேந்திரசோழன், முருகன், நல் முருகானந்தம், மகேஷ், ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் முருகானந்தம் குடும்பத்திற்கு தன் சொந்த நிதியாக ரூ.2500 வழங்கினார். நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் முதல் நிகழ்வு மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாய் அமைந்தது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், முக்கியப் பிரமுகர்களும், சக பத்திரிக்கை தோழர்களும், பல்வேறு அரசுத்துறை அலுவலர்களும், இந்நிகழ்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். நிர்வாகிகளை தொடர்பு கொண்ட தேசிய தலைவர், மாவட்ட ஆட்சியருக்கும், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். செய்தியாளர் இருந்தாலும், மறைந்தாலும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்நிகழ்வு அமைந்தது குறிப்பிடத்தக்கது.