வேலூர், நவ.16, 2018
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவருமான கா.குமார் சக பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் போன்று பத்திரிகை துறையில் பணியாற்றுவோரும் 24 மணி நேரமும், தினமும் பணியாற்றுகின்ற சூழல்தான் நிலவுகிறது. எந்தேரமும் எந்த பணியாக இருந்தாலும் தனது குடும்பத்தை மறந்து, சொந்த பந்தங்களை மறந்து பத்திரிகை உலகில் உழைப்பவர்கள்தான் உண்மையான பத்திரிகையாளர்கள்.
ஆனால் நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லாத சூழல் நிலவுகிறது. பத்திரிகையாளர்கள் என்பவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்கு அன்றாட நாட்டு நடப்புகளை உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் உன்னதமான பணியை செய்து வருகின்றனர். பொதுமக்களின் குறைகளை அரசுக்கும், அரசு சலுகைகளையும், நிகழ்வுகளையும் பொதுமக்களுக்கும் கொண்டு சேர்க்கும் உன்னதமான உயர்வான பணியை செய்து, பலரை ஏற்றி விடும் ஏணி படியாக உழைப்பவர்கள் பத்திரிகையாளர்கள் ஆவார்கள்.
இப்படி உடல், உயிர், எண்ணம் ஆகியவற்றை பத்திரிகைக்கு அர்ப்பணித்து பணி செய்து வருகின்றனர். உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைத்து, அவர்தம் அறிவுக்கண்ணை திறக்கும் உயரிய பணியை ஆற்றுவதால் பத்திரிகை துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க பத்திரிகை மற்றும் ஊடகத்துறையின் பணியினை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ம் தேதி தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நாளில் செய்தித்துறைக்கு என்று தனி நலவாரியம் அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும், பத்திரிகைத்துறையில் பணியாற்றுவோருக்கும் செய்தி சேகரிக்கும் இடங்களிலும் பாதுகாப்பு வழங்கவேண்டும். பத்திரிகையாளர்கள் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலும், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல், உயிர் பலி போன்ற நிகழ்வுகளும் அவ்வப்போது அரங்கேறிவருகிற்து. இதுபோன்ற செயல்கள் நடைபெறா வண்ணம் பணி பாதுகாப்பு, செய்தியாளர்கள் நலப்பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே செய்தித்துறைக்கு என்று தனி நலவாரியம் அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும். பத்திரிகை சுதந்திரத்தை காக்கவேண்டும் என்றும் இதன் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வித அச்சுறுத்தல் களுக்கும் ஆட்படாமல் உண்மை செய்திகளை தொடர்ந்து வெளியிடும் ஊடக தோழர்களுக்கு இந்நன்நாளில் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி இன்று நடைபெறும் கூட்டத்தில், தனி நலவாரியம் அமைத்தல், கல்வி சலுகை, கருத்து சுதந்திரம், பணி பாதுகாப்பு, செய்தி சேகரிக்க செல்லும் இடத்தில் உடமை பாதுகாப்பு, சுங்கச் சாவடிகளில் பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு இலவச அனுமதி உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உட்பட தேசிய அளவிளான செய்தியாளர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.
செய்தியாளர்கள் வாழ்வில் எல்லா வளமும் இறைவன் அருளால் பெற்று அவர்கள் பணி மென்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவருமான கா.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.